சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர பரப்பண அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவர் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சிறைக்குள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார் என்று கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து அதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளிவந்தன. ரூபாவின் துணிச்சலையும், நேர்மையையும் பாராட்ட வேண்டிய அரசு அவரை பணியிடமாற்றம் செய்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு மிரட்டல் வந்தது. கர்நாடக டிஜிபி அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டுள்ளார்.
ஒரு உண்மையை வெளிக்கொண்டு வந்ததற்காக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறார் ரூபா. ஆனால், இது அவருக்கு புதிதல்ல 13 ஆண்டுகளில் 37 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். எல்லாமே அவரது நேர்மைக்கு கிடைத்த பரிசு. கர்நாடக மக்களின் நிஜ ஹீரோயினாக ரூபா இப்போது பார்க்கப்படுகிறார்.
இந்த நிலையில் ரூபாவின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கப்போவதாக இயக்குனர் ஏ.எம்.ஆர் ரமேஷ் அறிவித்துள்ளார். இவர் ராஜீவ் கொலையாளிகள் பற்றிய சயணைட் என்ற படத்தையும், வீரப்பன் என்கவுன்ட்டர் பற்றிய வனயுத்தம் என்ற படத்தையும், சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு பற்றிய ஒரு மெல்லிய கோடு என்ற படத்தையும் இயக்கிவர். இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது:
ஐபிஎஸ் அதிகாரி ரூபா யாருக்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் சிறைத்துறையின் முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். அரசியல் செல்வாக்கு, பணபலம், அதிகார பலம் அனைத்தையும் நேர்மையை மட்டுமே பலமாக கொண்டு எதிர்கொண்டு வருகிறார்.
அவரது வாழ்க்கை இன்றைய இளம் பெண்களுக்கு கட்டாயம் பாடமாக இருக்கும். அதனால் அவரது கதையை ரூபா ஐ.பி.எஸ் என்ற பெயரில் தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்க இருக்கிறேன். தயாரிப்பாளர் கிடைக்காவிட்டால் நானே தயாரிப்பேன் என்கிறார் ரமேஷ்
இதுகுறித்து ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா கூறும்போது “எனது கதையை படமாக எடுக்கப்பட இருப்பதை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தப் படம் தயாராவதாக அறிகிறேன். ஆனாலும் இதற்கு அனுமதி அளிப்பது குறித்து நான் இன்னும் முடிவெடுக்கவில்லை” என்றார்.
Eelamurasu Australia Online News Portal