போதை பொருள் விவகாரத்தில் நடிகை சார்மியை பெண் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் போதை பொருட்கள் சப்ளை செய்ததாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின், ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தெலுங்குபட உலகின் நடிகர்-நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு தெலுங்கானா மாநிலம் கலால் வரித்துறையின் சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் நடிகை சார்மிக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் நடிகை சார்மி நேற்று முன்தினம் ஐதராபாத் ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், தன்னை பெண் அதிகாரிகள்தான் விசாரிக்க வேண்டும், விசாரணையின் போது தன்னுடன் தனது வக்கீல் இருக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை தெரிவித்து இருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி “சார்மி விரும்பும் இடத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும். பெண் அதிகாரிகளை கொண்டு மட்டுமே அவரை விசாரிக்க வேண்டும். அவரிடம் இருந்து ரத்தம், தலை முடி, நகங்கள் உள்ளிட்டவற்றை பலவந்தமாக சேகரிக்கக்கூடாது” என கூறி உத்தரவிட்டார். அதே சமயம் விசாரணையின் போது தனது வக்கீல் உடன் இருக்க வேண்டும் என்ற சார்மியின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.
இதற்கிடையே கலை இயக்குனரும், இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் உறவினருமான தர்மா ராவ் என்ற சின்னா நேற்று சிறப்பு புலனாய்வு குழு முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விசாரணை அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.