யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் பணிப் புறக்கணிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிகப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து வட மாகாண தனியார் பேரூந்துகள் இன்று (24) திங்கட்கிழமை பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் வழமை போன்று உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகள் ஆரம்பமாகின்றமையால் மாணவர்கள் ஆசிரியர்களின் தேவை கருதி இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.
முச்சக்கர வண்டி சங்கங்களும் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தரிப்பிடங்களில் கறுப்பு கொடிகள் கட்டியுள்ளதுடன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பொலிஸ் பாதுகாப்பு அதிகாரிக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து பதாதைகளும் கட்டப்பட்டுள்ளன.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து யாழ் பஸ்நிலையத்திற்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இதேவேளை நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்தும் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அஞ்சலி செலுத்தியும் அவர் கொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 22 அன்று நல்லூர் பின் வீதியில் நடைபெற்ற சூட்டு சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாண பல்கலைகழக கையலாசபதி கலையரங்கில் மாணவர் ஒன்றிய தலைவர் என்.அனுஐன் தலைமையில் நடைபெற்றது.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை மற்றும் பல்கலைகழக மாணவர்கள் பொலிசாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழங்குகளை ஆராய்ந்து வருவதோடு அவ் வழக்கு நீதிபதியின் மா.இளஞ்செழியன் அளப்பரிய சேவையாகின்றது என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
நீதிக்கே துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளுவது தான் நல்லாட்சியின் வரைவிலக்கணமா? இந்த நாட்டின் சட்டம் மற்றும் நீதித்துறையின் மீது நாட்டு மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்று மாணவர்கள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டுகின்றனர்
நீதிபதியினை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட இச் சம்பவத்தை மாணவர்கள் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது. அது நீதித்துறைக்கு ஏற்பட்ட சவாலகின்றது என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
நீதிபதியின் உயிர் காப்பற்றுவதற்காக தன்னுயிரை தீர்த்த நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரின் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம் என்று அவ் மாணவர்கள் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி தாக்குதலை கண்டித்து திருகோணமலை நீதிமன்ற சட்டத்திரணிகள் இன்று பணிபகிஷிகரிப்பில் ஈடுபட்டதுடன் கண்டன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
Eelamurasu Australia Online News Portal