மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிசூடு நடத்திய போது, தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மணல் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் சென்று எச்சரிக்கை விடுத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட போது இரு இளைஞர்கள் ஆற்றில் பாய்ந்துள்ளனர்.
குறித்த இரண்டு இளைஞர்களும் சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொம்மாதுறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கரடியனாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் எஸ்.மதுசன் (17வயது) சிறுவன் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர் எஸ்.கிசாந்தன் (18வயது) எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் விசேட அதிரடிப்படையினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் மீதும் விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
தொடர்ந்தும் அப்பகுதியில் பதற்ற நிலைமை காணப்படுவதன் காரணமாக பொதுமக்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலும் நடாத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் குறித்த பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் வாகனங்களும் தாக்குதலுக்குள்ளானதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.