எச்பி நிறுவனத்தின் புதிய கன்வெர்டிபிள் லேப்டாப்கள் வெளியிடப்பட்டுள்ளது. எச்பி பெவிலியன் X360 மற்றும் எச்பி ஸ்பெக்டர் X360 என அழைக்கப்படும் நோட்புக் சாதனங்களின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கணினி மற்றும் டேப்லெட் விற்பனையில் முன்னணியில் உள்ள எச்பி நிறுவனம் இரண்டு புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. மாணவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்களுக்கு ஏற்ற வசதிகளை கொண்டுள்ள புதிய சாதனங்களுடன் எச்பி ஆக்டிவ் பென் ஸ்டைலஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது.
எச்பி-யின் புதுவரவு சாதனங்கள் லேப்டாப் சந்தையில் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் சிறப்பம்சங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வெவ்வேறு டிஸ்ப்ளே அளவுகளில் கிடைக்கும் கன்வெர்டிபிள் லேப்டாப்களின் விலை ரூ.40,290 முதல் துவங்குகிறது.
எச்பி பெவிலியன் X360 மற்றும் ஸ்பெக்டர் X360 சிறப்பம்சங்கள்:
புதிய எச்பி பெவிலியன் X360 முழுமையான மெட்டல் வடிவமைப்பு மற்றும் 11.0 இன்ச், 14.0 இன்ச் ஐபிஎஸ் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இவற்றுடன் மல்டி-டச் டிஸ்ப்ளே, பேக்லிட் கீபோர்டு மற்றும் எச்பி இமேஜ்பேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய பெவிலியன் X360 லேப்டாப் ஏழாம் தலைமுறை இன்டெல் பிராசஸர், Nvidia GeForce கிராஃபிக்ஸ் கார்டு மற்றும் 2 ஜிபி வீடியோ ரேம், 1000 ஜிபி SSHD, 8 ஜிபி SSD தேர்வு செய்யப்பட்ட மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எச்பி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், 10 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்பெக்டர் X360 லேப்டாப் 1.3 கிலோ எடையில் 13.3 இன்ச் ஐபிஎஸ் ஃபுல்-எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. எச்பி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 12 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது. ஏழாம் தலைமுறை இன்டெல் பிராசஸர், 16 ஜிபி ரேம், 512 ஜிபி PCIe SSD ஸ்டோரேஜ் மற்றும் இமேஜ்பேட் வழங்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை தேதி:
புதிய எச்பி பெவிலியன் X360 லேப்டாப் விலை 11.6 இன்ச் மாடல் ரூ.40,290 முதல் துவங்குகிறது. அதிகபட்சமாக 14.0 இன்ச் மாடல் ரூ.55,290 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எச்பி ஸ்பெக்டர் X360 லேப்டாப் 13.3 இன்ச் மாடல் ரூ.1,15,290 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவற்றின் விற்பனை எச்பி விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் ஜூலை இரண்டாவது வாரத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவற்றின் முன்பதிவு இன்றே துவங்கிவிட்டது. எச்பி பெவிலியன் X360 முன்பதிவு கட்டணம் ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பெவிலியன் X360 மற்றும் ஸ்பெக்டர் X360 லேப்டாப்களில் சிறப்பான ஆடியோ அனுபவம் வழங்கும் எச்பி ஆடியோ பூஸ்ட் இரண்டு ஸ்பீக்கர்களிலும் வழங்கப்பட்டுள்ளது. எச்பி ஆக்டிவ் பென் நோட்புக் திரையில் வரையும் போது வாடிக்கையாளர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.