டெங்கு ஒழிப்பிற்காக அவுஸ்திரேலியாவால் சிறிலங்காவிற்கு உதவி!

இலங்கையில் டெங்கு ஒழிப்பு திட்டத்திற்காக உலக சுகாதார நிறுவனம் ஊடாக 475,000 அவுஸ்திடரேலிய டொலர்களை (ரூபா 58 மில்லியன்) அவுஸ்திரேலியா உடனடியாக வழங்கும் என்று அவுஸ்திரேலிய அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்தார்.  ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது.

டெங்கு நோய் சவாலில் இருந்து மீள்வதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா முடிந்தளவு உதவி வழங்கும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் நேற்று (20) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்து பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் அவுஸ்திரேலிய மொனாஸ் பல்கலைக்கழகமும் இலங்கை சுகாதார அமைச்சும் இணைந்து டெங்கு நோயை ஒழிப்பதற்கான வொல்பேசியா பக்டீரியாவை அறிமுகப்படுத்துவதற்கான கூட்டு ஆய்வை மேற்கொள்வதற்கு அவுஸ்திரேலியா ஒரு மில்லியன் டொலர்களை (ரூபா 118 மில்லியன்) வழங்குமென்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து சவாலான சந்தர்ப்பங்களிலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்குகின்ற ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.