அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகளுக்கு நெருக்கடி!

அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியுள்ள ஈழ அகதிகளுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியுள்ள ஈழ அகதிகளை தங்க வைப்பதற்கான மாற்று இடம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுஸ் மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவார்கள் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அரசாங்கத்தின் போது உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

எனினும், இந்த உடன்படிக்கை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், மனுஸ் மற்றும் நவுறு தீவுகளில் உள்ள தடுப்பு முகாம்களை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியுள்ள ஈழ அகதிகள் நெருக்கடி நிலைக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, அகதிகளை தங்க வைப்பதற்கான மாற்று இடம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.