உலகின் முன்னணி சாட் அப்ளிகேஷனான வாட்ஸ்அப்பில், பயனாளர்கள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்ட பின்னரே மற்றொருவரை சென்றடையும். பின்னர் அந்த செய்தியானது, ‘டிகிரிப்ட்’ செய்யப்பட்ட பின்னரே பயனாளரின் மொபைல் போனில் படிக்கமுடியும். இதனால், வேறு எவராலும் அந்த செய்தியை இடைமறித்துப் படிக்கமுடியாது.
பயனாளர்களைப் பொறுத்தவரை, இது பாதுகாப்பான விஷயம்தான் என்றாலும், சமூகவிரோதிகள் இதைப் பயன்படுத்தி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. இதனால், பல நாடுகளிலும், வாட்ஸ்அப் உள்ளிட்ட என்கிரிப்ட் செய்யப்பட்ட அப்ளிகேஷன்களுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட என்கிரிப்ட் செய்யப்படும் அப்ளிகேஷன்களுக்கு எதிராக சட்டமசோதா ஒன்று சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இயற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி, தகவல்களை என்கிரிப்ட் செய்யும் அப்ளிகேஷன்கள் அனைத்தும், அந்நாட்டின் அரசுக்குப் போதிய ஒத்துழைப்பு தரவேண்டும். சட்ட அமலாக்கத்துறை உதவி கோரும்போது, என்கிரிப்ட் செய்த தகவல்களை டிகிரிப்ட் செய்து தர வேண்டும்.
இதுகுறித்துப் பேசியுள்ள அந்நாட்டுப் பிரதமர் மால்கம் டர்ன்புல், “ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலிய சட்டம் மட்டும்தான் செல்லுபடியாகும். நான் ஒன்றும் கிரிப்டோகிராபர் கிடையாது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal