காளை மாடு தாக்கி கை கட்டை விரலை இழந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் கட்டை விரல் கையில் பொருத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஸாக் மிட்செல் (20), இவர் கடந்த ஏப்ரலில் அங்குள்ள விவசாய நிலத்தில் பணியாற்றி கொண்டிருந்தார்.
அப்போது, அங்கிருந்த காளை ஒன்று மிட்செலை தாக்கியுள்ளது. பின்னர் அவருடைய கையை வேலிக்குள் காளை எட்டி உதைத்துள்ளது.
இதையடுத்து மிட்செலின் கை கட்டை விரல் துண்டானது. அதன் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மிட்செலின் கை கட்டை விரலை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
மருத்துவர்கள் கால் கட்டை விரலை எடுத்து கையில் பொருத்த முடியும் என மிட்செலிடம் கூறியுள்ளனர்.
ஆரம்பத்தில் தயங்கினாலும் பின்னர் ஒத்துக்கொண்டார். இதையடுத்து எட்டு மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் அவரின் கால் கட்டை விரல் முதலில் பிரித்தெடுக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டு அறுவை சிகிச்சைகள் மூலம் துண்டிக்கப்பட்ட கை கட்டை விரல் பகுதியில், கால் கட்டை விரலானது வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
இதனிடையில் இன்னும் 12 மாதங்களுக்கு மிட்செலுக்கு மருத்துவ கண்காணிப்பு தேவைப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.