அவுஸ்ரேலியா நாட்டில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளதற்கு எதிராக கிளம்பிய சர்ச்சையை தொடர்ந்து அரசியல்வாதி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கிரீன்ஸ் கட்சி சார்பாக நாடாளுமன்றத்தில் செனட்டராக பதவி வகித்து வரும் ஸ்கொட் லுட்லாம் என்பவர் தான் தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவுஸ்ரேலியா நாட்டு சட்டப்படி அரசு பதவிகளில் உள்ளவர்கள் அவுஸ்ரேலியா நாட்டு குடியுரிமை தவிற வேற எந்த நாட்டு குடியுரிமையையும் பெற்றுருக்க கூடாது.
ஆனால், 2006-ம் ஆண்டு செனட்டராக பதவியேற்று 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஸ்கொட்டிற்கு நியூசிலாந்து நாட்டு குடியுரிமையும் உள்ளது என்பது சில தினங்களுக்கு முன்னர் அம்பலமானது.
ஸ்கொட்டிற்கு 3 வயது இருந்தபோது அவரது பெற்றோர் அவுஸ்ரேலியாவில் குடியேறியுள்ளனர். ஸ்கொட்டிற்கு அவுஸ்ரேலியா குடியுரிமை கிடைத்ததும் நியூசிலாந்து குடியுரிமை திரும்ப பெறப்பட்டிருக்கும் என எண்ணியுள்ளார்.
ஆனால், ஒரு வாரத்திற்கு முன்னர் மட்டுமே அவருக்கு இரட்டை குடியுரிமை உள்ளது என தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து செனட்டர் பதவியை விட்டு விலக வேண்டும் எனவும், 9 ஆண்டுகளாக அரசு சார்பாக பெற்ற ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இச்சர்ச்சையை தொடர்ந்து ஸ்கொட் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் பெற்ற ஊதியத்தை திரும்ப செலுத்துவாரா என்பது எதிர்வரும் நாட்களில் தெரியவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.