அவுஸ்ரேலிய அணியிடம் இந்தியா தோல்வி!

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவிடம் தோல்வி கண்டது.

8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன.

இந்த நிலையில் பிரிஸ்டலில் நேற்று நடந்த 23-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மிகவும் வலுவான அவுஸ்ரேலியாவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த அவுஸ்ரேலியா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பூனம் ரவுத், மந்தனா ஆகியோர் களம் இறங்கினார்கள். மந்தனா 3 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து கப்டன் மிதாலி ராஜ், பூனம் ரவுத்துடன் இணைந்தார். இருவரும் அவுஸ்ரேலிய அணியின் அபார பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 166 ரன்னாக உயர்ந்த போது நிலைத்து நின்று ஆடிய மிதாலி ராஜ் (69 ரன்கள்) கிறிஸ்டன் பீம்ஸ் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதைத்தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர் களம் இறங்கினார். அருமையாக ஆடிய பூனம் ரவுத் சதம் கண்டார். அவர் அடித்த 2-வது சதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 203 ரன்னாக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் பூனம் ரவுத் (106 ரன்கள், 136 பந்துகளில் 11 பவுண்டரியுடன்) ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன் பிறகு வேதா கிருஷ்ணமூர்த்தி ரன் எதுவும் எடுக்காமலும், ஹர்மன்பிரீத் கவுர் 23 ரன்னிலும், கோஸ்வாமி 2 ரன்னிலும், சுஷ்மா வர்மா 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. ஷிகா பாண்டே 7 ரன்னுடனும், தீப்தி ஷர்மா 5 ரன்னுடனும் களத்தில் நின்றனர். அவுஸ்ரேலியா அணி தரப்பில் மெகன் ஸ்கப்ட், எலிஸ் பெர்ரி தலா 2 விக்கெட்டும், ஆஷ்லிக் கார்ட்னெர், கிறிஸ்டன் பீம்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய அவுஸ்ரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிகோல் பால்டன் 36 ரன்னிலும், பெத் மூனி 45 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 45.1 ஓவர்களில் அவுஸ்ரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கப்டன் மெக் லேனிங் 76 ரன்னுடனும், எலிஸ் பெர்ரி 60 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் நின்றனர். இந்திய அணி தரப்பில் பூனம் யாதவ் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

மற்றொரு லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இன்னொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை சாய்த்தது.

இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சி இருக்கும் நிலையில் இங்கிலாந்து, அவுஸ்ரேலியா அணிகள் தலா 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றும், தென்ஆப்பிரிக்க அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவில்லை) 9 புள்ளிகள் பெற்றும் அரைஇறுதிக்கு முன்னேறின. இந்திய அணி வருகிற 15-ந் திகதி நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை சந்திக்கிறது.

இந்த மோதலில் வெற்றி பெறும் அணி அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்திய அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளியும், நியூசிலாந்து அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவில்லை) 7 புள்ளியும் பெற்று முறையே 4-வது, 5-வது இடத்தில் உள்ளன.

201707131012556674_World-Cup-Cricket._L_styvpf