மனுஸ் தீவு மூடும் பணி ஆரம்பம்!

அவுஸ்திரேலிய அரசால் நிர்வகிக்கப்படும் பப்புவா நியூகினியின் மனுஸ் தீவு, தடுப்பு முகாம் மூடப்பட்டுவரும் நிலையில் அங்குள்ள பல புகலிடக்கோரிக்கையாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பப்புவா நியூகினி தடுப்பு முகாமில் தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. நீதிமன்றின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த முகாம் மூடப்படவுள்ளது.

இதன்படி Lombrum முகாம் தற்போது இடிக்கப்பட்டுவருகின்ற அதேவேளை அங்கிருந்தவர்கள் Lorengau-இலுள்ள தற்காலிக தங்குமிடத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஆனால் Lorengau-இல் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அங்கு தஞ்சம் கோரியவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

சுமார் 800 பேர் இன்னமும் அங்கு உள்ள நிலையில் இவர்களில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை திருப்பியனுப்புவது தொடர்பிலும், ஏனையவர்களின் மீள் குடியேற்றம் தொடர்பிலும் அவுஸ்திரேலிய அரசுடன் பேச்சு நடத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் Peter O’Neill தெரிவித்தார்.

இதேவேளை மனுஸ் தடுப்பு முகாம் எதிர்வரும் அக்டோபர் மாதம் முற்றிலுமாக மூடப்படவுள்ளது.