யாழ் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய துன்னாலையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், இன்று காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், நெல்லியடி முதல் கொடிகாமம் அரசடி வீதிவரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழந்து, பின்னர் பதற்றம் நிலவியபோதும், எந்தவோர் அரசியல்வாதிகளும் தமது பகுதிக்குள் வரவில்லை என்று தெரிவித்த, இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தில் உள்ள இளைஞர்கள், வரும் தேர்தல் காலத்தில், எந்தவோர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பகுதியில் காலடி எடுத்து வைக்கமுடியாதென்று கூறியுள்ளனர்.
இதேவேளை, வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம், க. தர்மலிங்கம் ஆகியோர் உயிரிழந்த இளைஞனின் வீட்டுக்கு நேற்றுச் சென்றிருந்த நிலையில், இன்னொரு வட மாகாண சபை உறுப்பினரான சிவயோகன், அப்பகுதிக்குச் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
6ஆம் கட்டை மணற்காட்டுப் பகுதியில், அனுமதியற்ற முறையில், மணலை கன்ரர் ரக வாகனத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்றிச் சென்றபோது, பொலிஸாரினால் வழிமறிக்கப்பட்ட நிலையில், மீறிச் சென்றபோது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே, 24 வயதான யோகரசா தினேஸ் என்ற துன்னாலையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்திருந்தார்.