பிரிஸ்டலில் நேற்று நடந்த அவுஸ்ரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.
8 அணிகள் இடையிலான பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்டலில் நேற்று நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலியா, இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய அவுஸ்ரேலியா அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 256 ரன்களே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. உலக கோப்பையில் 1993-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அவுஸ்ரேலியாவை இங்கிலாந்து அணி வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு தொடரில் தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த அவுஸ்ரேலியாவுக்கு இது முதலாவது தோல்வியாகும். அதே சமயம் 5-வது ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்துக்கு 4-வது வெற்றியாகும்.
மற்றொரு ஆட்டத்தில் அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து முதலாவது வெற்றியை பதிவு செய்தது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.