சூரிய சக்தியால் உப்பு நீரை குடிநீராக்கலாம்!

பல நாடுகளில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு, கடல் நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பம் தீர்வாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், இத்தொழில்நுட்பத்திற்கு அதிக மின்சாரம் தேவை.அமெரிக்காவிலுள்ள, ரைஸ் பல்கலைக்கழகத்தின் நேனோ தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பிரிவு, ஏற்கனவே பரவலாக உள்ள சவ்வு மூலம் உப்பு நீரை வடிகட்டும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தில், சூரிய ஒளி வெப்பத்தை உறிஞ்சும், நேனோ கரித் துகள்கள் தடவிய சவ்வு ஒன்று உள்ளது.இந்த சவ்வின் மீது சூரிய ஒளி படும்போது, அதன் வெப்பத்தால் நீர் ஆவியாகிறது.

நீராவி குளிர்ந்ததும் துாய நீர் கிடைக்கிறது. சூரிய ஒளியை சவ்வின் மீது குவிக்க ஒரு குவி ஆடியை பயன்படுத்துவதால், சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வெப்பத்தை விட, 25 மடங்கு சூடு உண்டாகிறது.

இந்த தொழில்நுட்பத்திற்கு மின்சாரம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று சதுர மீட்டர் பரப்பளவுள்ள சவ்வுப் பலகை மூலம் மணிக்கு, 20 லிட்டர் தண்ணீரை இத்தொழில்நுட்பம் சுத்திகரிக்கும் என ரைஸ் ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான, கிவிலின் லீ தெரிவித்துள்ளார். எங்கும் துாக்கிச்செல்லும் பெட்டி வடிவில் இந்தக் கருவி இருப்பதால், மின்சாரம் இல்லாத பகுதிகளில் கூட, உப்பு நீரை சுத்திகரிக்க முடியும்.