இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த ஹர்பஜன் சிங் தற்போது மிதூன் இசையில் பாடல் ஒன்று பாட உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். 37 வயதாகும் இவருக்கு தற்போது இந்திய சீனியர் அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஐ.பி.எல். தொடர், ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார். தற்போது ஹர்பஜன் சிங் பாடகராக அவதாரம் எடுக்க உள்ளார். இந்திய நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்ட உண்மையான ஹீரோக்களை போற்றும் வகையில் இந்த பாடல் அமைய உள்ளது.
ஹர்பஜன் சிங் பாடும் பாடலுக்கு இசையமைப்பாளர் மிதூன் இசை அமைக்க உள்ளார். இதற்காக ஸ்டூடியோவில் ஹர்பஜன் சிங் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஹர்பஜங் சிங் பாடுவது குறித்து மிதூன் கூறுகையில் ‘‘இப்படி ஒரு பாடல் அமைவது குறித்து ஹர்பஜன் சிங் என்னிடம் பேசினார். கொஞ்ச நாட்களாகவே நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். இசையில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை என்னிடம் வெளிப்படுத்தினார்.
நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை போற்றும் வகையில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். ஒரு பாடலுக்காக கடந்த ஒரு வருடங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம்.
பாடல் உருவாக்குவது குறி்த்து பல்வேறு ஆலோசனைகள் பரிமாற்றம் செய்து கொண்டோம். ஆனால் அவரது பிறந்த நாளில்தான் அது கருவாக உருவானது’’ என்று கூறியுள்ளார்.
இந்த பாடல் ஹிந்தி மற்றும் ஆங்கில குரலில் வீடியோவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு, டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.