தலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் இருந்து உயிர்தப்பிய பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாய் பள்ளி படிப்பை முடித்து, சமூக வலைத்தளமான டுவிட்டரிலும் இணைந்துள்ளார். அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய். இவர் மாணவியாக இருக்கும்போதே பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். பெண் கல்வி குறித்தும் குரல் கொடுத்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் அவர்மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் லண்டன் சென்று சிகிச்சை பெற்றார்.
அவரது உடல்நிலை சீராகி, மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், தீவிரவாதத்தை எதிர்த்து இன்னும் உறுதியுடன் போராடப் போவதாகவும், பெண் கல்வியின் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்யப் போவதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் லண்டனில் தங்கி பள்ளிப் படிப்பை தொடர்ந்தார். இதற்கிடையே, மலாலாவின் சமூக பணியை கவுரவிக்கும் வகையில், ’அமைதிக்கான தூதுவர் விருதை’ ஐ.நா.சபை வழங்கியது.
இந்நிலையில், லணடனில் வசித்து வரும் மலாலா யூசுப்சாய், நேற்று தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. இதையடுத்து, மலாலா யூசுப்சாய் சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார். மலாலா பள்ளிப் படிப்பை முடித்ததற்கும், டுவிட்டரில் இணைந்ததற்கும் உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறீர்கள் என்றும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடாவ், மலாலாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
டுவிட்டரில் முதன்முதலாக பதிவிடுகையில், “இன்று எனது பள்ளி படிப்பின் கடைசி நாள். டுவிட்டரில் இணைந்த முதல் நாள்’’ என குறிப்பிட்டுள்ளார். டுவிட் செய்த 24 மணி நேரத்துக்குள் மலாலாவை 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.