ஐ.பி.எல் தொடரில் இரண்டாண்டுகள் தடையிலிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்தாண்டு பங்கேற்க உள்ள நிலையில், அந்த அணியின் பயிற்சியாளராக ஷேன் வார்னே நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2015 ஜூன் மாதம் ஐ.பி.எல் போட்டிகளில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட இரண்டாண்டுகள் இடைகால தடை விதிக்கப்பட்டது. இந்த தடைகாலம் வருகிற ஜூலை 15-ம் திகதியோடு நிறைவடைகிறது. எனவே அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிகளில் இந்த இரு அணிகளும் பங்கேற்க உள்ளன.
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த இந்திய வீரர் ராகுல் டிராவிட் இந்தியா ‘ஏ’ அணிக்கும் 19 வயதுக்குள்ளோருக்கான இந்திய அணிக்கும் மேலும் இரண்டு ஆண்டுகள் பயிற்சியாளராக செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக முன்னாள் அவுஸ்ரேலியா வீரரும், ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமான ஷேன் வார்னேவை நியமிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த இரண்டு வருடம் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்பதற்கான நுழைவு கட்டணத்தை இரு அணிகளும் விரைவில் செலுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் அணி 56 கோடி ரூபாயும் சென்னை அணி 73 கோடி ரூபாயும் நுழைவு கட்டணமாக செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.