மகளிர் உலககோப்பை – அவுஸ்ரேலியா, இங்கிலாந்து அணிகள் வெற்றி!

மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

லண்டன் நகரில் நடைபெற்று வரும் மகளிர் உலககோப்பையில் நேற்று மூன்று லீக் போட்டிகள் நடைபெற்றன. ஒரு போட்டியில் இங்கிலாந்து தென்னாப்ரிக்காவை எதிர்கொண்டது. இப்போட்டியில், இங்கிலாந்து டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பியுமௌண்ட் 148 ரன்களும், சாரா டெய்லர் 147 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 275 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்ரிக்க அணியில் முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் அரைசதம் அடித்து அசத்தினர். இருப்பினும் பின்னர் வந்தவர்கள் ரன் குவிக்க தவறியதால் 50 ஓவர் முடிவில் தென்னாப்ரிக்கா 9 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் இங்கிலாந்து 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 78 (110) ரன்களும், கேப்டன் மித்தாலி ராஜ் 53 (78) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை வீராங்கனை ஸ்ரீபாலி வீரக்கொடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இலங்கை அணி சார்பில் திலானி மனோதரா 61 (75) ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஜுலான் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மற்றொரு லீக் சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற அவுஸ்ரேலியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது.அவுஸ்ரேலிய அணியின் எல்சி பெர்ரி, எல்சி விலானி மற்றும் அலிஷா ஹீலி ஆகியோர் அரைசதம் அடித்தனர். பாகிஸ்தான் கப்டன் சனா மிர் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியினர் தொடர்ச்சியாக விக்கெட்களை பறிகொடுத்தனர். அந்த அணி 50 ஓவர் முடிவில் பத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் அவுஸ்ரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

புள்ளி பட்டியலில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இதன்மூலம் இரு அணிகளும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.