அவுஸ்ரேலியாவில் இருந்து புறப்பட்ட விமானம் மீது பறவைகள் மோதியதை தொடர்ந்து விமானம் அவசரமாக திசை திருப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் விமான நிலையத்தில் இருந்து AirAsia X என்ற விமானம் 359 பயணிகளுடன் நேற்று புறப்பட்டுள்ளது.
மலேசியா தலைநகரான கோலாலம்பூருக்கு புறப்பட்ட அந்த விமானத்திற்கு வெளியே திடீரென பலத்த ஓசை அடுத்தடுத்து எழுந்துள்ளது.
விமானத்தின் என்ஜின் மீது பறவைகள் மோதியது போன்று அந்த சத்தம் இருந்ததால் விமானி உடனடியாக திசை திருப்பி பிரிஸ்பேன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
விமானம் புறப்பட்டபோது ஓடுத்தளத்தில் உயிரிழந்த இரண்டு பறவைகளின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பயணி ஒருவர் பேசியபோது, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் 4 அல்லது 5 முறை என்ஜின் மீது பறவைகள் மோதியது போல் பலத்த சத்தம் கேட்டது.
சத்தத்திற்கு பின்னர் ஆரஞ்சு நிறத்தில் வெளிச்சமும் தெரிந்ததால் பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறினர்.
ஆனால், விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்’ என பயணி அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.
விமானம் அவசரமாக திசை திருப்பப்பட்டு தரையிறங்கியது தொடர்பாக விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏர் ஆசியா விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் ஜாவா கடலில் விழுந்த விபத்தில் அதில் பயணம் செய்த 162 பயணிகளும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.