தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே தனி தமிழீழம் என்ற கோட்பாட்டின் மூலம் இரா.சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ். கந்தர்மடம் மணற்தரையில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தேர்தலில் தோற்றுபோன தரப்பினர் என கூறியது தொர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பின்னர் சம்பந்தன் ஒரு தேர்தலிலும் வெற்றியடையவில்லை. 2000ஆம் ஆண்டு தேர்தலில் பயத்தினால் போட்டியிடவில்லை. அவ்வாறான சம்பந்தன் லண்டனுக்கு சென்று தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கத்தின் காலில் விழுந்தார்.
லண்டன் நாடாளுமன்ற கட்டடத்தின் ஒரு தொகுதியில் அண்டன் பாலசிங்கத்தின் காலில் விழுந்த சம்பந்தன் “நான் இனி துரோகம் செய்ய மாட்டேன், சாகும்போது துரோகியாக சாக விரும்பவில்லை” என கெஞ்சினார்.
ஆனால், தான் தனியே தீர்மானிக்க இயலாது என அன்டன்பாலசிங்கம் கூறிய பிறகு, மீண்டும் திருகோணமலைக்கு வந்து புலிகளின் உறுப்பினர் ஒருவரை பிடித்து அவருடைய மோட்டார் சைக்கிளில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்று தளபதி சொர்ணத்தின் காலில் விழுந்தும் கெஞ்சினார்.
அதன் பின்னர் இரா.சம்பந்தனுக்கு புலிகள் புனர்வாழ்வு கொடுத்து தேர்தலில் போட்டியிட செய்தனர். புலிகளின் தயவால் தேர்தலில் வெற்றியடைந்தார்.
வெளிநாட்டில் இருந்து வரும் பிரதிநிதிகள் சம்பந்தனையும் சுமந்திரனையும் மட்டுமே சந்திக்கின்றார்கள். அவ்வாறு சந்திக்கும் இருவரும் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
இந்த சந்திப்புக்களின் ஊடாக என்னத்தான் சாதித்துள்ளார்கள். தனித் தமிழீழம் என்ற ஆணை போட்டபடியால் மாத்திரமே இந்த காலத்தில் வெற்றி பெற்றார். அதற்குப்பின்னர் வந்த தேர்தலில்களில் சம்பந்தன் தோல்வியடைந்தார். என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.