நிபந்தனையுடன் மக்களைச் சந்திக்கும் சுமந்திரன்குழு!

அடுத்தடுத்து நெருக்கடிகளைச் சந்தித்துவரும் தமிழரசுக்கட்சி தன்னுடைய வாக்குவங்கியை தக்க வைப்பதற்கான முனைப்புக்களிலும் தீவிரம் காட்டிவருகின்ற அதேவேளையில் மக்கள் சந்திப்புக்களை எச்சரிக்கையுடன் அணுகுவதற்கும் தலைப்பட்டுவருகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன.

நடைபெற்றுமுடிந்த வடக்குமாகாணசபை நெருக்கடி நிலையினை அடுத்து ஆட்சிக் கவிழ்ப்பிற்கு முற்பட்டு தோல்விகண்ட தமிழரசுக்கட்சி தற்போது தங்கள் மீதான விமர்சனங்களை ஈடுசெய்வதற்கான கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருகின்றது.

இளைஞர் அணிக் கூட்டம், செயற்குழுக் கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்பு என பல தரப்பட்ட சந்திப்புக்கள் நடைபெற்றுவருகின்ற நிலையில் மக்கள் சந்திப்புக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் நீர்வேலியில் நாளை ஏற்பாடாகியிருக்கின்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் சுமந்திரன், சிறிதரன் மற்றும் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இருப்பினும் முக்கிய நிபந்தனையாக கேள்விகள் எழுத்துமூலமே வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டே அழைப்பிதழ் கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது.

புலம்பெயர் தேசங்களில் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றமையால் பயணங்களை தவிர்த்து வருகின்ற தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் தற்போது தாயகத்திலும் இவ்வாறான நிலையை எதிர்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

letter