தமிழ்மொழி கற்க அவுஸ்ரேலிய அரசு உறுதுணையாக உள்ளது!

அவுஸ்ரேலிய நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழியைக் கற்க அந்நாட்டு அரசு உறுதுணையாக உள்ளதாக அவுஸ்ரேலிய நாட்டின் தொழிலாளர் கட்சி பிரதிநிதியும், தமிழ் அரசியல்வாதியுமான ஓ.பழனிச்சாமி தெரிவித்தார்.

அரசுமுறைப் பயணமாக ஒருவாரம் இந்தியாவுக்கு வந்துள்ள 9 பேர் அடங்கிய அவுஸ்ரேலியா நாட்டு பிரதிநிதிகள் குழு தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் ஆய்வுப் பயணங்களை முடித்துக் கொண்டு பெங்களூருக்கு வியாழக்கிழமை வந்தது.

பெங்களூரு அரசியல் செயல்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.சி. சேலிடால்போட், ஓ.பழனிச்சாமி உள்ளிட்டோர் அடங்கிய அவுஸ்ரேலிய பிரதிநிதிகள் குழுவினர், கட்டாய வாக்களிப்புமுறை குறித்து இந்திய அரசியல்வாதிகளுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் இக்குழுவினர் பங்கேற்று, இந்தியாவில் வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படுவது குறித்து ஆராய்ந்தறிந்தனர்.

தமிழகத்தின் மதுரையில் இருந்து ஆஸ்திரேலிய நாட்டுக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் குடியேறிய தமிழரான ஓ.பழனிச்சாமியும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தார்.

அவுஸ்ரேலியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பாக, தினமணி நிருபரிடம் ஓ.பழனிச்சாமி கூறியது:

இந்தியாவில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள், அவை செயல்படுத்தப்படும் முறைகள், இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான நல்லுறவை மேம்படுத்துதல் போன்ற அம்சங்களை ஆராய்வதற்காக மத்திய அரசில் எதிர்க்கட்சியாக விளங்கும், விக்டோரியா, மெல்போர்ன், தென் அவுஸ்ரேலியா, மேற்கு அவுஸ்ரேலியா வடக்கு பிராந்தியம், குயின்ஸ்லேண்ட், கேன்பெர்ரா மாகாணங்களை ஆளும் தொழிலாளர் கட்சியின் 9 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் கடந்த ஒருவாரமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தோம்.

இந்தியாவுடனான தொழில், வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை வேகமாக பெருகிவருகிறது. கிறிஸ்தவர்கள் தவிர இந்துக்கள், இஸ்லாமியர்கள் பெருமளவில் வசித்து வருகிறார்கள்.

தொழிலாளர் கட்சியின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் துணை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிவருகிறேன்.

அவுஸ்ரேலியாவில் இந்தியர்கள் நிம்மதியாக வாழ்ந்துவருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மாணவர்கள் மீது இனவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக பெரும் பரபரப்பு நிலவியது. சில நேரங்களில் இத்தாக்குதல்கள் இந்தியர்களிடையே நடந்ததாக இருந்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் இன பாகுபாடு இருந்தாலும், அது முகம் சுளிக்கும் அளவுக்கு தரம்தாழ்ந்தில்லை. எனவே, இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறுவதில் உண்மையில்லை. அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதில் உலக அளவில் ஆஸ்திரேலியாவை யாரும் விஞ்ச முடியாது.

அண்மைக் காலமாக இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகளவில் அரசியலில் பங்காற்ற வாய்ப்பு கிடைத்து வருகிறது. அவுஸ்ரேலியாவில் இந்தியர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியர்கள் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்திய அரசியலின் தரம் மேம்பட வேண்டும். வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு திட்டமிடல் முக்கியம். அதில் இந்தியர்கள் கவனம் செலுத்தவேண்டும்.

இத்தனை வாகன பெருக்கம் தேவையா? என்பதை ஆய்வுக்குள்படுத்தி, பொது வாகனங்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்.

அவுஸ்ரேலியாவில் சுமார் 75 ஆயிரம் தமிழர்கள் வசித்துவருகிறார்கள். தமிழர்கள் தமிழ் மொழியைக் கற்க ஆஸ்திரேலிய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களில் கலை, பண்பாடு, மொழி, இலக்கியத்தை வளர்த்தெடுக்க அரசு வாய்ப்பளிக்கிறது.

தனியார் கல்வி நிலையங்களில் தமிழ் கற்க அரசு நிதியுதவி அளிக்கிறது. இதுதவிர, ஈழத் தமிழர்களுக்கும் அவுஸ்ரேலிய அரசு உதவிவருகிறது என்றார்.