வளையும் ‘டிவி’ திரை!

திரைத் தொழில்நுட்பத்தில், பல புதுமைகளை விடாப்பிடியாக அறிமுகப்படுத்தி வரும் எல்.ஜி., அண்மையில் வளைந்து கொடுக்கும் தன்மையுள்ள, ‘டிவி’ திரையை அறிவித்துள்ளது.

ஒ.எல்.இ.டி., தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த, ‘டிவி’யை, சுவற்றில் ஓவியம் போல ஆணி அடித்து மாட்டிவிட்டு, தேவைப்படாதபோது சுருட்டி வைத்துக்கொள்ள முடியும். அது மட்டுமல்ல, இந்தத் திரைக்கு அப்பால் உள்ள வகைகளை, 40 சதவீத தெளிவுடன் பார்க்கவும் முடியும் என்கிறது எல்.ஜி.,

வர்த்தக வளாகங்களில் விளம்பரங்களுக்கும், பெரிய பதாகைகளைப் போல பொது இடங்களில் தொங்க விடவும் இந்த திரை பயன்படும் என்கிறது எல்.ஜி., இத்தனைக்கும் இதன் துல்லியம், எச்.டி., திரைகளுக்கு ஈடாக இருப்பதுதான் ஆச்சரியம். இதன் விலை பற்றி மூச்சுவிடாத எல்.ஜி., விரைவில் நுகர்வோருக்கான மாடலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.