ஒரு உயிரினத்தின் செல்லை வேகமாக பிளக்கும், ‘கில்லட்டின்’ தொழில்நுட்பம்

ஒரு செல்லை இரண்டாக பிளக்கும் தொழில்நுட்பம் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளதுதான். ஆனால், அது ஆராய்ச்சியாளர்களின் வேகத்துக்கு ஒத்துழைப்பதில்லை. எனவே, அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒரு உயிரினத்தின் செல்லை வேகமாக பிளக்கும், ‘கில்லட்டின்’ தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இது இரண்டே நிமிடங்களில் 150 உயிருள்ள செல்களை சரிபாதியாக வெட்டித் தருகிறது. இரண்டாக வெட்டிய செல்களை ஆராய்வது, புற்றுநோய், நரம்பு செல் நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் உதவும். புதிய பொருட்களை உருவாக்கும் பொறியாளர்களுக்கும் செல் ஆராய்ச்சி உதவுகிறது.

‘தினமும் வேலைக்கு பஸ், கார், சைக்கிள் ஆகியவற்றில் போவோரில், சைக்கிளில் போவோர், நாள் முழுவதும் வேலைச் சுமை, மனச்சுமை குறைவாக இருப்பதாக உணர்கின்றனர்’ என, ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

கனடாவிலுள்ள மான்ட்ரியேல் நகரில், 123 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் ‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் வொர்க் பிளேஸ் மேனேஜ்மென்ட்’ இதழில் வெளியாகியுள்ளன. நல்ல உடற்பயிற்சியாகக் கருதப்படும் சைக்கிள் ஓட்டுதல், வேலைத் திறனையும் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று எல்லோர் கையிலும் இருக்கும் ஸ்மார்ட்போன், நம் மூளையின் செயல் திறனை பாதிக்கிறதா? அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 800 பேரிடம் ஒரு சோதனையை நடத்தினர். அதில் ஸ்மார்ட்போனை வைத்திருக்கலாம்; ஆனால், பயன்படுத்தக்கூடாது என்று ஒரு தரப்பினரிடமும், ஸ்மார்ட்போனை வைத்திருக்கக்கூடாது என்று ஒரு தரப்பினரிடமும் நிபந்தனையிட்டு, சில மூளைத்திறனை சோதிக்கும் தேர்வுகளை நடத்தினர்.

இறுதியில், ஸ்மார்ட்போனுடன் தேர்வில் பங்கேற்றவர்களின், தேர்வில் குறைவாகவே வெற்றிபெற்றது தெரியவந்தது. இதனால், ஸ்மார்ட்போனை பயன்படுத்தாவிட்டாலும், அது அருகில் இருப்பதேகூட, மூளையின் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

சாலைப் போக்குவரத்து இரைச்சல் அதிகமுள்ள பகுதியில் வசிக்கும் பெண்களின் கருத்தரிக்கும் திறன் பாதிக்கப்படுவதாக டென்மார்க்கிலுள்ள மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். டென்மார்க்கில் வசிக்கும், 65 ஆயிரம் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதிக வாகன இரைச்சல் உள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு கருத்தரிக்கும் முயற்சிகள் வெற்றி பெருவது 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை தாமதமாவதாக ஆய்வில் தெரியவந்தது. வீட்டிற்குள் வரும் இரைச்சலை முடிந்தவரை தடுப்பது உதவும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொது இடங்களில் இருக்கும் தட்பவெப்பத்திற்கும், ஒருவர் பரிச்சயமில்லாதவருக்கு உதவும் மனப்பான்மைக்கும் தொடர்பு இருக்கிறதா? இந்தக் கேள்வியுடன் மூன்று சமூக ஆய்வுகளை நடத்தினர் ஆராய்ச்சியாளர்கள். அதன் முடிவு, ‘யுரோப்பியன் ஜர்னல் ஆப் சோசியல் சைக்காலஜி’ இதழில் வெளியாகியுள்ளது.
வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, உடல் சோர்வும், மனச் சோம்பலும் வருகிறது. இதனால், மற்ற சூழல்களில் உதவும் மனம் கொண்டவர்கள் கூட, பருவநிலை வெப்பமாக இருக்கும்போது பிறருக்கு உதவ மறுக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.