கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்தும் போப்பாண்டவரின் உதவியாளர்களில் முக்கியமான நபரான கார்டினால் ஜார்ஜ் பெல் என்பவர் மீது அவுஸ்திரேலியா காவல் துறையினர் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்ரேலியாவில் உள்ள மெல்போர்ன் மற்றும் சிட்னி மறைமாவட்டங்களில் பேராயராக பணியாற்றியவர் கார்டினால் ஜார்ஜ் பெல். இவர் அவுஸ்திரேலிய கத்தோலிக்க திருச்சபையில் முக்கியமான நபராக கருதப்படுகிறார்.
முன்னாள் போப்பாண்டவர் பெனடிக்ட் ராஜினாமா செய்த பிறகு போப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்ட பிரான்சிஸ்சின் உதவியாளராகவும் நிதி ஆலோசகராவும் ஜார்ஜ் பெல் செயல்பட்டுவருகிறார்.
இவர் வத்திகான் மாநகரில் முக்கியமான நபர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் தற்போது சிறு குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்தில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
76 வயதான ஜார்ஜ் பெல், சிறுவர்களை பாலியல் வன்புணர்வு செய்த குற்றங்களுக்காக அவுஸ்திரேலியா நீதிமன்றத்தில் ஆஜர் ஆகுமாறு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அவுஸ்திரேலிய காவல்துறையின் குற்றச்சாட்டுகளுக்கு ஜார்ஜ் பெல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையில் உள்ள குருக்கள் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன, மேலும் இந்த குற்றச்சாட்டுகள் பலவற்றிற்கு திருச்சபையின் தலைமை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் குருக்கள் மற்றும் ஆயர்கள் ஈடுபடுவதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கார்டினால் ஜார்ஜ் பெல் மீது அவுஸ்ரேலிய காவல்துறை பாலியல் குற்றத்திற்காக வழக்கு பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal