முல்லைத்தீவு – பிலக்குடியிருப்புப் பகுதியில், மக்கள் மீள்குடியேறி நான்கு மாதங்களைக் கடந்துள்ள போதும்,தமக்கான எந்த உதவிகளும் வழங்கப்படாது, பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக, மேற்படி பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்புப் பகுதியில், தங்களுடைய காணிகளை விடுவிக்கக்கோரி, கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 1ஆம் திகதி வரையான ஒரு மாத காலம், விமானப்படையினருக்கு எதிராக கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி, குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்பகுதியில் மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகளோ அல்லது நிரந்தர வீடுகளோ வழங்கப்படாது அவர்களால் அமைக்கப்பட்ட தறப்பாள் கொட்டகைகளில் பெரும் சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த பகுதியில் மக்கள் மீள்குடியேறி நான்கு மாதங்களாகிய போதும், இதுவரை எந்த விதமான உதவிகளும் தமக்கு வழங்கப்படவில்லை என்றும் ஒரு மாத காலம் நிலத்துக்காகப் போராடியதன் பழிவாங்கலாகவே இவ்வாறு உதவிகள் மறுக்கப்பட்டிருப்பதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முகாமில் இருந்து மீள்குடியேற்றத்துக்காக கொண்டு வரப்பட்ட மக்களை சொந்த இடத்தில் குடியமர்த்தும்போது தற்காலிக வீடுகள் மற்றும் இதர உதவிகள் வழங்கப்படுவது வழமை. ஆனால், எங்களை கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் கட்டாயத்தின் பேரில் தங்கவைத்து விட்டு, இப்போது நாங்கள் உதவிகளைக் கேட்கின்றபோது, மாதிரிக் கிராமத்தில் சலக உதவிகளும் செய்யப்பட்டுள்ளதென அதிகாரிகளால் தெரிவிக்கப்டுகின்றது.
நாங்கள் மாதிரிக் கிராமத்தில் எந்த உதவிகளையும் கேட்கவில்லை. எங்களுடைய சொந்த நிலத்தில் குடியேறுவதற்கும் அதற்கான அடிப்படை உதவிகளையும் தருமாறும் தான் கேட்டிருந்தோம். ஆனால், இன்று நான்கு மாதங்களாகியும் நிலத்தை போராடிப் பெற்றதன் பழிவாங்கலாக, எங்களுக்கான உதவிகள் புறக்கணிக்கப்படுவதாக, இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal