அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் சம்பளம் உயர்ந்து இருக்கிறது. கதாநாயகிகளுக்கு முதல் வாய்ப்பு கிடைப்பதுதான் பெரும் கஷ்டம். அதன்பிறகு மளமளவென படங்கள் குவியும். இந்தி நடிகைகள் அவர்கள் மொழி படங்களில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் தென்னிந்திய நடிகைகள் தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் கலக்குகிறார்கள். ஒவ்வொரு மொழிக்கும் தனி சம்பளமும் நிர்ணயித்து உள்ளனர்.
படங்கள் வெற்றி பெற்றால் சம்பள தொகையை ஏற்றி விடுகிறார்கள். சில நடிகைகள் நகை கடைகள் திறப்பது, வணிக நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவர்களாக இருப்பது என்றும் சம்பாதிக்கிறார்கள். கதாநாயகிகளின் புதிய சம்பள பட்டியல் விவரம் வெளியாகி இருக்கிறது.
நடிகை நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் கேட்பதாக தகவல். இவர் 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நம்பர் 1 கதாநாயகியாக வலம் வந்தார். அவர் மார்க்கெட்டை வேறு எந்த நடிகையாலும் எட்டி பிடிக்க முடியாத உயரத்தில் இருந்தார். தமிழ் தவிர தெலுங்கு பட உலகிலும் கொடி கட்டி பறக்கிறார்.
தற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், அறம், வேலைக்காரன், மற்றும் ஒரு தெலுங்கு படம் என்று 5 படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்றால் புதுமுக நடிகர்களுடனும் ஜோடி சேருகிறார். தெலுங்கு படங்களில் பாலகிருஷ்ணா போன்ற மூத்த நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கவும் சம்மதிக்கிறார்.
அனுஷ்கா சம்பள விஷயத்தில் நயன்தாராவை முந்தி விட்டார். இப்போது அவர் ரூ.5 கோடி சம்பளம் கேட்கிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் தெலுங்கு படத்தில் அறிமுகமான அவரது சினிமா வாழ்க்கை சூப்பராகவே போய் கொண்டிருக்கிறது என்கின்றனர். அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி படங்கள் அவருக்கு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளன. பாகுபலி படத்தில் அனுஷ்காவுக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுத்தனர். புதிய படங்களுக்கு அதைவிட கூடுதலாக ரூ.1 கோடி கேட்கிறார்.
சமந்தா சென்னையில் பிறந்து விரைவில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை மணந்து ஆந்திர மருமகளாக போகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார். சமந்தா தமிழ், தெலுங்கில் நடித்த படங்கள் நன்றாக ஓடி லாபம் ஈட்டி உள்ளன.
காஜல் அகர்வால் ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார். தெலுங்கில் இவருக்கு மகதீரா படம் திருப்பு முனையாக அமைந்தது. தமிழில் விஜய்யுடன் மெர்சல், அஜித்குமாருடன் விவேகம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்கள் திரைக்கு வந்த பிறகு சம்பளத்தை மேலும் உயர்த்தும் முடிவில் இருக்கிறார்.
சென்னை அழகியாக தேர்வாகி சினிமாவுக்கு வந்த திரிஷா 15 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க கவனம் செலுத்துகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.1½ கோடி வாங்குகிறார் என்கின்றனர்.
சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.1 கோடி வாங்குகிறார். ஹன்சிகா, தமன்னா, ரகுல்பிரீத்சிங் ஆகியோரும் ரூ.1 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.