அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சம் பரிசு

இந்தோனேஷிய மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகளில் வாகை சூடிய இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சத்தை பரிசாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார்.

இந்தோனேஷிய மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகளில் வாகை சூடிய இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சத்தை பரிசாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார்.

சமீபத்தில் நடந்த இந்தோனேஷிய ஓபன், அவுஸ்ரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற ஸ்ரீகாந்த் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் ஆவார்.

அடுத்தடுத்து பட்டங்களை வென்று சாதனை படைத்த ஸ்ரீகாந்துக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் பாராட்டு விழா விஜயவாடாவில் நேற்று நடந்தது. விழாவில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கி பாராட்டினார். ஸ்ரீகாந்துக்கு, மாநில அரசின் குரூப்-1 அதிகாரி பதவி வழங்க தயாராக இருப்பதாக கூறிய சந்திரபாபு நாயுடு, வெளிநாட்டில் பயிற்சி பெற விரும்பினால் அதற்கான நிதி உதவி அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். ஸ்ரீகாந்தின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.15 லட்சத்தை பரிசாக வழங்கினார்.

பரிசை பெற்ற ஸ்ரீகாந்த் விழாவில் பேசுகையில், ‘பயிற்சியாளர் கோபிசந்துக்கு பேட்மிண்டன் அகாடமி அமைக்க முதல்-மந்திரி நிலம் வழங்கியது ஒருங்கிணைந்த ஆந்திராவில் பேட்மிண்டன் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கிறது. நான் எப்பொழுதும் ஆந்திர மாநிலத்துக்காகவே விளையாடி வருகிறேன். அது வருங்காலத்திலும் தொடரும்’ என்றார்.

இதற்கிடையே, பேட்மிண்டன் வீரர்-வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 11-வது இடத்தில் இருந்து 3 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்த 24 வயதான ஸ்ரீகாந்த் கடந்த 10 மாதங்களில் முதல்முறையாக தர வரிசையில் ‘டாப்-10’ இடத்துக்குள் வந்து இருக்கிறார். 2015-ம் ஆண்டில் ஜூன் மாதத்தில் 3-வது இடத்தை பெற்றதே அவரது அதிகபட்ச தரவரிசையாகும்.