வாடிகனின் மூத்த பாதிரியார் கார்டினல் ஜார்ஜ் பெல் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றில் நடக்க உள்ள விசாரணையில் பங்கேற்க அவர் நேரில் செல்கிறார்.
வாடிகனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாவது உயர்ந்த அதிகார மையம், கார்டினல் ஜார்ஜ் பெல் ஆவார். பாதிரியாரான இவர்தான், வாடிகன் பொருளாளர்.
76 வயதான ஜார்ஜ் பெல் மீது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர்.
இது தொடர்பாக அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாண உயர் நீதிமன்ற அதிகாரி பேட்டன் கூறுகையில், “கார்டினல் ஜார்ஜ் பெல் மீது பல்வேறு தரப்பினரும் பாலியல் புகார்களை செய்துள்ளனர். எனவே அவர் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்” என கூறினார்.
அதே நேரத்தில் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் என்னென்ன என்பது குறித்து நீதிமன்ற தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை கார்டினல் ஜார்ஜ் பெல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தவறான வாக்குமூலங்களின் அடிப்படையில் 2 ஆண்டுகள் விசாரணை என்ற பெயரில் இடைவிடாமல் தான் குற்றம்சாட்டப்பட்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக, தான் விடுமுறையில் செல்வதற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அனுமதி அளித்துள்ளதாக அவர் கூறினார்.
இதுபற்றி அவர் வாடிகனில் நிருபர்களிடம் பேசுகையில், “நான் அப்பாவி. என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. பாலியல் துஷ்பிரயோகம் என்ற செயல், எனக்கு அருவருப்பானது. இந்த குற்றச்சாட்டுகளை நான் கோர்ட்டில் எதிர்கொள்வேன்” என கூறினார்.
மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் வரும் 18-ந் திகதி நடக்க உள்ள விசாரணையில் பங்கேற்க அவர் நேரில் செல்கிறார்.