நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே பேசி அசத்தியுள்ளார் பெண் அரசியல்வாதி.
பெண்கள் குழந்தைகளுக்கு பொது இடத்தில் வைத்து பாலூட்டுவதற்கு தயக்கம் காட்டியே வருகின்றனர். ஆனால் அவுஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் செயல் இதற்கு மாறாக அமைந்துள்ளது.
ஜூன் 22ம் திகதி அவுஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற வாட்டர்ஸ் தன்னுடைய 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது சபாநாயகர் வாட்டர்ஸை பேச அழைக்க சிறிதும் பதற்றமோ தயக்கமோ இல்லாமல் எழுந்த அவர் குழந்தைக்கு பாலூட்டியவாரே தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்து அதை நிறைவேற்றவும் செய்துள்ளார்.
வாட்டர்ஸ் போன்று அரசியலில் முக்கிய பங்காற்றுபவர் இது போன்று துணிச்சலான செயலை செய்துள்ளதை பெண்கள் தங்களுக்கான உத்வேகமாக நினைக்க வேண்டியுள்ளது. பொது இடமாக இருந்தால் என்ன? யாரோ ஒருவரை நினைத்து நம் பிள்ளைக்கு பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டுமா என்றும் வாட்டர்ஸ் கேள்வி எழுப்புகிறார்.
நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெற்றுள்ளார் இடது சாரி கீரின் கட்சியைச் சேர்ந்த வாட்டர்ஸ், மே 10ம் திகதி நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போதும் இதே போன்று நாடாளுமன்றத்தில் அமர்ந்து குழந்தைக்கு பாலூட்டிய சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
கடந்த வருடம், நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் என்று அந்த நாடு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் பெண்களின் பங்களிப்பை நாடாளுமன்ற செனட் சபையில் அதிகரிக்கச் செய்வதே இதன் முக்கியத்துவம் என்று இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது.