குடியுரிமை விண்ணப்பங்கள் புதிய சட்டத்தின்படியே பரிசீலிக்கப்படும்!

அவுஸ்ரேலிய Citizenship-குடியுரிமைச் சட்டத்தைக் கடினமாக்கும் முனைப்பில் அரசு ஈடுபட்டுள்ள நிலையில், ஏப்ரல் 19ம் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட குடியுரிமை விண்ணப்பங்கள் அனைத்தும், புதிய சட்டத்தின் கீழேயே பரிசீலிக்கப்படுமென குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசு முன்வைத்துள்ள குடியுரிமை தொடர்பான புதிய சட்ட முன்வடிவு இன்னமும் சட்டமாக்கப்படாத நிலையில், குடிவரவுத் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

குடிவரவுத் திணைக்களம்வசம் தற்போது 81 ஆயிரம் குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாத நிலையில் இருக்கும் அதேநேரம் தொடர்ந்தும் பலர் விண்ணப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப்பின்னணியில் குடியுரிமை விண்ணப்பம் தொடர்பில் அழைப்பு மேற்கொள்பவர்களிடம், ஏப்ரல் 19ம் திகதிக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் புதிய சட்டத்தின்படியே பரிசீலிக்கப்படுமென குடிவரவுத் திணைக்களம் அறிவுறுத்திவருகின்றது.

Permanent Residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் எனும் தற்போதைய நிபந்தனையை மாற்றி, ஒருவர் வதிவிட உரிமையுடன் 4 ஆண்டுகள் நாட்டில் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என்பதுடன், ஆங்கிலப்புலமையை நிரூபித்தல், பிற சமூகத்தோடு இணைந்து வாழப் பழகியிருத்தல், அவுஸ்ரேலிய விழுமியங்களை ஏற்றல் போன்ற பல புதிய நிபந்தனைகள் தற்போது அரசு முன்வைக்கும் குடியுரிமைச் சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ளன.

இவற்றில் ஆங்கிலப்புலமையை நிரூபிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள உயர் வரையறை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்பதுடன், வதிவிட உரிமை பெற்ற ஒருவர் குடியுரிமைபெறுவதற்கு 4 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதும் நியாயமற்ற அம்சம் எனத் தெரிவித்துள்ள எதிர்கட்சியான லேபர் கட்சி, இதனை தாம் ஆதரிக்கப்போவதில்லை என அறிவித்திருந்தது.

குறித்த சட்டமுன்வடிவு செனற் அவையின் ஒப்புதலைப்பெறவேண்டிய பின்னணியில், இதனைச் சட்டமாக்குவதற்கு அரசுக்கு 10 எதிர்கட்சி செனட்டர்களின் ஆதரவு தேவைப்படும்.

கிரீன்ஸ்கட்சியும் அரசின் இந்த சட்டமுன்வடிவு நியாயமற்ற ஒன்று எனத் தெரிவித்துள்ளநிலையில், இதைச் சட்டமாக்குவதில் அரசுக்கு சிரமங்கள் எழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.