அவுஸ்ரேலியாவில் எத்தனை பேர் வீட்டில் தமிழ் பேசுகின்றனர்?

கடந்தவருடம் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகளை, சென்சஸ் திணைக்களம் வெளியிட ஆரம்பித்துள்ளது.

இதன்படி அவுஸ்ரேலியாவில் வாழ்பவர்களில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 73,161 என சென்சஸ் திணைக்கள தரவுகள் கூறுகின்றன.

கடந்த 2011ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 50,151ஆக காணப்பட்ட அதேநேரம் 2006ம் ஆண்டு 32,704 ஆக காணப்பட்டது. இதேவேளை அவுஸ்ரேலியாவில் ஆங்கிலம் உட்பட வீட்டில் பேசப்படும் முக்கிய மொழிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ABS

இது ஒருபுறமிருக்க கடந்த 2011 இலிருந்து சுமார் 1.3 மில்லியன் பேர், புதிதாக அவுஸ்ரேலியாவில் குடியேறியிருக்கின்றனர். முக்கியமாக சீனாவிலிருந்து 191,000 பேரும் இந்தியாவிலிருந்து 163,000 பேரும் இங்கு குடியேறியுள்ளனர்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டிலிருந்து வெளியேறியவர்களைக் கழித்தால், தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் வெளிநாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 2011 இலிருந்து 2016 வரையான காலப்பகுதியில் 870,000 ஆக அதிகரித்துள்ளது. அதாவது அவுஸ்ரேலியாவில் வாழ்பவர்களில் நால்வரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர் ஆவார்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்ற தினத்தன்று 23.4 மில்லியன் பேர் எண்ணப்பட்டுள்ளநிலையில் இது 2011 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 8.8 வீத அதிகரிப்பாகும்.

இவர்களில் 80 வீதமானவர்கள் விக்டோரியா, நியூ சவுத்வேல்ஸ், குயின்ஸ்லாந்து, ACT ஆகிய பகுதிகளிலேயே வசிக்கின்றனர்.

சென்சஸ் தரவுகளின்படி அவுஸ்ரேலியாவில் வாழ்பவர்களில் தாம் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 440,300 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த சனத்தொகையின் 1.9 வீதமாகும்.

அதேநேரம் தமக்கு மதமில்லை-No Religion என பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 22 வீதத்திலிருந்து 30 வீதமாக அதிகரித்துள்ளது.