உலக கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை நொறுக்கியது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை நொறுக்கியது.
8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் டவுன்டானில் நேற்று நடந்த 4-வது லீக்கில் வெஸ்ட் இண்டீசும், 6 முறை சாம்பியனான அவுஸ்ரேலியாவும் மோதின.
டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாலே மேத்யூஸ் 46 ரன்களும், கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 45 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் எலிசி பெர்ரி 3 விக்கெட்டுகளும், ஜெஸ் ஜானாசென், பீம்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா 38.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 205 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி கண்டது. தொடக்க வீராங்கனைகள் நிகோல் பால்டன் 107 ரன்களும் (116 பந்து, 14 பவுண்டரி, நாட்- அவுட்), பெத் மூனி 70 ரன்களும் விளாசினர். அறிமுக ஒரு நாள் போட்டியிலேயே சதம் அடித்தவரான 28 வயதான பால்டன், உலக கோப்பையிலும் தனது முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தி இருக்கிறார். அவரே ஆட்டநாயகியாக தேர்வு ஆனார்.
லீசெஸ்டரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் (இந்திய நேரப்படி மாலை 3 மணி) மோதுகின்றன.