ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொறியாளர் சூசன் கிரஹாம் என்பவர் மரங்களை நடும் ட்ரோன்களை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
இந்த புதிய ட்ரோன் மரங்கள் வளர்வதற்கேற்ற சூழலைத் தேர்ந்தெடுப்பதிலும், பின்னர் அந்த பகுதிகளில் விதைகளைத் தூவவும் உதவும் என்று சூசன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இந்த ட்ரோன்கள் மூலம் ஆண்டுக்கு நூறு கோடிக்கும் அதிகமான மரங்களை நட முடியும் என்று கூறும் சூசன், பருவநிலை மாறுபாட்டில் காடுகள் அழிப்பு முக்கிய பங்கு வகிப்பதாகவும் கவலை தெரிவிக்கிறார்.
மனித நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் மரம் வளர ஏற்ற சூழல் இருந்தால், அதையும் இந்த ட்ரோன்கள் மூலம் கண்டறியலாம் என்பது கூடுதல் சிறப்பு என்கிறார் சூசன்.
பயோகார்பன் எஞ்சினியரிங் எனும் இவரது குழுவினர் வடிவமைத்துள்ள புதிய ட்ரோன் மூலம் ஒருநாளைக்கு ஒரு லட்சம் மரங்கள் வரை நட முடியுமாம். மேலும், மனிதர்கள் எளிதில் அணுக முடியாத மலைப்பிரதேசங்களிலும் இந்த ட்ரோன்கள் மூலம் விதைகளைத் தூவ முடியும்.
மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் அதிகரிப்பால் ஆண்டுதோறும் 1,500 கோடிக்கும் அதிகமான மரங்களை பூமி இழப்பதாகக் கூறுகிறது ஐக்கிய நாடுகள் அவையில் சமீபத்திய தரவு ஒன்று.
ஆண்டுதோறும் 900 கோடி மரங்களை நாம் நட்டாலும், 600 கோடி மரங்களை இழந்துவருகிறோம் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் என்கிறார்கள் பயோகார்பன் எஞ்சினியரிங் நிறுவனத்தினர்.
Eelamurasu Australia Online News Portal