நடிகைகள் பொதுச்சொத்து அல்ல!- வித்யாபாலன்

வித்யா பாலன் வித்தியாசமான நடிகை மட்டுமல்ல, பேச்சிலும் வித்தியாசம் காட்டுபவர்.

அதை அவரது இந்தப் பேட்டியில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்!

அதிகாரம் செலுத்தும் விஷயத்தில் நீங்கள் எப்படி?

அதிகாரமிக்க பதவிகளில் உள்ள வெற்றிகரமான பெண்கள்கூட தங்கள் அதிகாரத்தைக் கையாளத் தடுமாறுகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அதிகாரம் இருந்தும் பல நேரங்களில் அவர்கள் மன்னிப்புக் கேட்பதும், அளவுக்கு மீறி பிறரை ‘தாஜா’ செய்ய வேண்டியதும் இருக்கிறது. எல்லாத் துறைகளில் உள்ள பெண்களின் நிலையும் இதுதான்.

இந்த விஷயத்தில் உங்கள் நிலை என்ன?

இதை இதைச் செய்ய வேண்டும், இதை இதைச் செய்யக் கூடாது என்று கூறாத குடும்பத்தில் இருந்து வந்தவள் நான். எனக்குப் பெரிதாக கட்டுப்பாடுகள் கிடையாது. ஆனால் ஒரு பெண்ணாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதனால்தானோ என்னவோ, சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் மன்னிப்புக் கோரும் வழக்கம் எனக்கு இருந்தது. ‘ஸாரி’தான் நான் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. ஒரு நடிகையானவர் கோபப் படக்கூடாது என்று படப்பிடிப்புத் தளத்திலும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் நான் நடித்த வலுவான பெண் பாத்திரங்களால் என் மீதான பிறரின் அணுகுமுறை தற்போது மாறியிருக்கிறது. முன்புபோல் நான் தற்போது அதிகம் ‘ஸாரி’ சொல்வதில்லை.

வெற்றியை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள்?

என்னால் என்னுடைய வெற்றியைக் கையாள முடியவில்லை என்பதுதான் உண்மை. பெரும்பாலான நேரங்களில் நான் அடக்கிவாசிக்க, பலர் அதையே எனக்கு எதிராகப் பயன்படுத்த முயலுகிறார்கள்.

தோல்விகள்…?

நான் மட்டுமல்ல, யாருக்குமே தோல்வியைக் கையாளத் தெரியவில்லை. தோல்வியின்போது நான் வருந்துவேன், துக்கப்படுவேன், பின்னர் அதிலிருந்து நகர்ந்துவிடுவேன். தோல்வி என்னைப் பாதிக்காது என்று பொய்சொல்ல விரும்பவில்லை.

உங்களைப் போன்ற சுயசிந்தனை உள்ள பெண்களுக்கு திரையுலகில் இடமிருக்கிறதா?

என்னிடம் சில தயாரிப்பாளர்கள், ‘நீங்கள் வலுவான பெண் கதாபாத்திரங்களில் நடிப்பது சரி. ஆனால் அவ்வப்போது நீங்கள் வழக்கமான ‘ஹீரோயின்’ வேடங்களிலும் நடிக்க வேண்டும்’ என்பார்கள். எனக்குப் புரியாது. வலுவான பெண் பாத்திரங்களும் ஹீரோயின்கள்தானே? அப்படியானால், நான் இதுவரை நடித்த வேடங்களை எல்லாம் எதில் சேர்ப்பார்கள்?

உங்களை அதிகம் கோபப்படுத்துவது எது?

நான் வித்யா பாலன் என்பதை மறந்து, ‘மிசஸ் கபூர்’ என்று யாராவது அழைத்தால் எனக்குக் கோபம் வரும். நான் சித்தார்த் கபூரை சந்திப்பதற்கு முன்பிருந்தே என்னை அறிந்த சிலரும்கூட ‘மிசஸ் கபூர்’ என்கிறார்கள். அவர்கள் அப்படி அழைப்பது, நான் ஒரு பிரபலமான நபரின் மனைவி மட்டுமே என்பதைப் போலிருக்கிறது. நான் சொந்தமாக எதையுமே சாதிக்காதது போலிருக்கிறது. வாழ்க்கையில் நான் செய்த ஒரே காரியம், சித்தார்த் கபூரை மணந்தது மட்டும்தான் என்பதைப் போல தோன்றவைக்கிறார்கள். நான் நிறையப் போராடி எனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறேன். அதை விட்டுக்கொடுக்கவே மாட்டேன்.

பொதுஜனம் அறிந்த ஒரு முகமாக, கோபத்தை வெளிப்படையாக வெளிக்காட்டுவதில் உங்களுக்கு ஏதும் பிரச்சினை இருக் கிறதா? உங்களால் கோபத்தை இயல்பாக வெளிக்காட்ட முடிகிறதா?

வீட்டில் நான் அதிகம் கோபப்படுவேன். ஒரு குண்டூசி கீழே விழுந்தால்கூட கோபப்படுகிறாய் என்று எங்கப்பா கூறுவார். ஆனால் ஒரு பிரபலமாக, அதிலும் ஒரு நடிகையாக வெளியிடங்களில் நான் கோபத்தை அடக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் திரை யுலகுக்கு வந்தபோது வயது 26. அப்போது நான் யாரையும் முகம் சுளிக்கச் செய்துவிடக் கூடாது என்று நினைத்தேன். எனவே நான் கவனமாக இருந்தேன், கோபத்தை வெளிப்படையாகக் காட்டுவதைத் தவிர்த்தேன். எல்லோரும் என்னை விரும்ப வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். திரும்பிப் பார்த்தால், அது தவறு, அதனால் நமக்குத்தான் பாதிப்பு என்று தற்போது நான் உணர்கிறேன். இயல்பான கோபத்தைக் கூட உள்ளுக்குள் போட்டு உழன்றதால் வயிற்றில் அமிலச்சுரப்பு அதிகமாகி அவஸ்தைப் பட்டதுதான் உண்மை.

எப்போதும் ஊடகங்கள் உங்களை கவனித்துக்கொண்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உண்மையில் எனக்கு அது பிடித்திருக்கிறது. நடிகை என்பதால் எனக்குக் கிடைக்கும் புகழை நான் ரசிக்கிறேன். பலரும் அறிந்த முகமாக இருப்பதால் எங்களுக்குக் கிடைக்கும் செல்வாக்கு, அன்பு எல்லாம் பெரிய விஷயங்கள். பிரபலமாக இருப்பதால் எங்களுக்குக் கிடைக்கும் சொகுசுகள், வசதிகள் எல்லாம் ஏராளம். என்னால் அதை மறுக்க முடியாது. இதன் பிடிக்காத மறுபக்கம், நாங்கள் பொதுஜனம் அறிந்த முகம்தான், பொதுச்சொத்து கிடையாது என்று சிலர் உணராதது.

நீங்கள் சர்ச்சைகளைத் தவிர்க்க முயற்சிக்கிறீர்களா?

நான் என்னைப் பற்றி வெளிவரும் கட்டுரைகளைப் படிப்பதில்லை, பொழுதுபோக்கு சார்ந்த செய்திகளைப் பார்ப்பதில்லை. நான் எனக்கென்று உள்ள தனி உலகத்தில் வாழ்கிறேன், அப்போதுதான் என்னால் நிம்மதியாக இருக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் உள்ள சம்பள வித்தியாசம் பற்றி நீங்கள் வெளிப்படையாகப் பேசுகிறீர்களே?

தனித்தனி நபர்களின் முயற்சியால்தான் மாற்றம் வரும். தனித்தனி நபர்களாக முயற்சி செய்யாமல், போராட்டம், சட்டம் அது இது என்று பேசிப் பயனில்லை.

சித்தார்த் கபூரிடம் உங்களை ஈர்த்த விஷயம் எது?

அவர் அருகில் இருக்கும்போது நான் சத்தம் போட்டுச் சிரிக்கலாம் என்பது முதல் விஷயம். அவர் தானாக வளர்ந்தவர், அடுத்தவர் விஷயத்தில் அதிகம் மூக்கை நுழைக்காதவர். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் ரொம்ப ரொம்ப அழகானவர்.

திருமணம், உங்களிடமோ, உங்கள் தொழிலிலோ தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறதா?

என் தொழிலில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் திருமணத்துக்குப் பிறகு நான் நிறைய மாறியிருக்கிறேன். திருமணத்துக்கு முன்பு நான் என்னைப் பற்றி மட்டுமே அதிகம் சிந்திப்பேன். என்னால் எல்லாவற்றையும் இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள முடியுமா என்பதே எனது பெரிய கவலையாக இருந்தது. நல்லவேளையாக, சித்தார்த்தின் பழக்கவழக் கங்களும் ஏறக்குறைய என்னைப் போல்தான் இருக்கின்றன. எனவே எங்கள் இருவருக்குமே எல்லாம் எளிதாகத்தான் இருக்கிறது.

திருமண வாழ்வில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம்?

திருமண வாழ்க்கை வெற்றிகரமாக நீடிப்பதற்கு பொதுவிதி எதுவும் இல்லை என்பதுதான் இந்த நான்காண்டு கால மணவாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டிருக்கும் பாடம்.

நீங்கள் ஆடை அணியும் விதம் குறித்து நிறைய விமர்சனங்கள் வந்தனவே…?

ஒரு நடிகையாக, என்னைப் பற்றிய விமர்சனங் களுக்கு காலம் கடந்து எனது ‘ரியாக்‌ஷனை’ வெளிப்படுத்துவது எனது இயல்பாகி இருந்தது. ஆனால் உடனுக்குடன் நமது ‘ரியாக்‌ஷனை’ வெளிப்படுத்துவதே நல்லது என்பதை இப்போது உணர்ந்திருக்கிறேன். அதனால்தான் இப்போது உடனுக்குடன் கோபத்தை வெளிப்படுத்துகிறேன், அதேநேரத்தில் என்னைப் பற்றிய பிறரின் தேவையற்ற கருத்துகளைப் புறக் கணிக்கிறேன். நாங்கள் புகழ் வெளிச்சத்தில் இருக்கிறோம் என்பதற்காகவே யாருக்கும் எனது டிரெஸ்சிங் சென்ஸ் பற்றியோ, ஆளுமை பற்றியோ விமர்சிக்க உரிமையில்லை.