எதிர்காலத்தில் மோதல்கள் இன்றி வடமாகாண சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இனப்பிரச்சினை தீர்வில் இணைந்து செயற்படுவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜா தெரிவித்தார்.
வடமாகாண சபை முறுகல் நிலையின் பின்னர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும், இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (24) சந்திப்பு இடம்பெற்றது.
வடமாகாண சபையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களுக்கு பதிலாக இரு அமைச்சர்களை நியமிப்பது என்பது மிகவும் சிறிய விடயம்.
இனப்பிரச்சினை தீர்வுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்இ நாடாளுமன்றத்திலும் இனப்பிரச்சினை தீர்வுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த தருணத்தில் காணி மற்றும் மீள்குடியேற்றம்இ அரசியல் கைதிகள் விடுதலை காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயங்கள் முக்கியமாக முதலமைச்சருடன் கலந்துரையாடப்பட்டன.
இனப்பிரச்சினை மற்றும் ஏனைய விடயங்களுற்கான தீர்வு காண்பது தொடர்பில் வடமாகாண சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து செயற்பட வேண்டுமென்றும் எமக்குள் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் எமக்குள் பிரச்சினைகள் எழாமல் இனப்பிரச்சினை முயற்சிகளில் ஒன்றுபட்டு தீர்ப்பதென்றும். இன்று சர்வதேச ரீதியாக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை முறையாக பயன்படுத்தி தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக ஒன்றுபட்டு செயற்படவும் தீர்மானித்துள்ளோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் மாகாண சபையும் பிளவுபட்டு செயற்பட்டமையினால்இ வடமாகாண சபையில் இவ்வாறான பிரச்சினைகள் எழுந்ததாக எம்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் இனத்தின் விடுதலை மிகவும் முக்கியம். அந்தவகையில் வடமாகாண சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இனப்பிரச்சினை சார்ந்த விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதாக இணக்கம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், இன்னும் 3 தினங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி, வடமாகாண சபை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் இறுதி முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.