அவுஸ்ரேலியாவில் 64,000 பேர் சட்டவிரோதமாக வாழ்கின்றனர்!

அவுஸ்ரேலியா வில் 64,600 பேர் சட்டவிரோதமாக வாழ்ந்துவருவதாக குடிவரவுத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒருவர் கடந்த 40 வருடங்களாக குடிவரவுத்திணைக்கள அதிகாரிகளின் கண்களில் படாமல் வாழ்கிறார்.

குறித்த 64,600 பேரில் மூன்றில் இரண்டு பங்கானவர்கள் அவுஸ்ரேலியாவிற்குள் சுற்றுலா விசா, மாணவர் விசா, வேலை செய்வதற்கான விடுமுறை விசா போன்ற சட்டபூர்வமான விசாவுடன் வந்தவர்கள் எனவும் இவர்களில் 70 வீதமானவர்கள் தமது விசாக்காலம் முடிவடைந்த பின்னரும் இங்கு தங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பது மட்டுமல்லாமல் இவர்களில் சுமார் 20,000 பேர் வேலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களில் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ள அதேநேரம் சீனர்கள் இரண்டாமிடத்தில் உள்ளனர்.

இது தவிர அமெரிக்கா, பிரிட்டன், இந்தோனேஷியா, இந்தியா, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து,ஜேர்மனி, பிரான்ஸ், ஜப்பான், பிஜி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.