மனிதக் கடத்தல் சர்வதேச பிரச்சினை என்றும் எமது சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் ஊடாக இந்த அநியாயத்தை தோற்கடித்து மனித உயிர்களை பாதுகாக்க முடியும் என்று அவுஸ்திரேலியாவின் சுயாதீன எல்லை செயற்பாட்டு பிரிவின் கட்டளைத் தளபதி எயார் வய்ஸ் மார்ஷல் ஸ்டிபன் ஒஸ்போர்ன் (Stephen Osborne) கூறியுள்ளார்.
பயனுள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தகவல்களை பரிமாற்றிக் கொள்வதன் ஊடாக மனிதக் கடத்தல் படகுகளை நிறுத்துவதற்கு அவுஸ்திரேலியாவால் முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அண்மையில் அவுஸ்திரேலியாவின் எல்லைப் படைப் பிரிவின் ஓசன் சீல்ட் என்ற (Ocean Shield) மிகப்பெரிய ரோந்து கப்பல் முதற்தடவையாக இந்தியா மற்றும் சிறிலங்கா துறைமுகங்களுக்கு வருகை தந்திருந்தது.
இதன்போது, அவுஸ்திரேலிய எல்லைப் படைப் பிரிவின் குழுவினர்,சிறிலங்கா கடற்படை மற்றும் இந்திய கடலோரப் பாதுகாப்பு பிரிவினருடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்ததுடன், பயிற்சி நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையின் முக்கியத்துவம் பற்றி அவுஸ்திரேலியாவின் சுயாதீன எல்லை செயற்பாட்டு பிரிவின் கட்டளைத் தளபதி ஸ்டிபன் ஒஸ்போர்ன் உரையாற்றும் போது இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த வருட ஆரம்பத்தில் 25 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மனிதக் கடத்தல் படகு ஒன்று அவுஸ்திரேலியாவால் இடைநடுவில் பிடிக்கப்பட்டதுடன், சிறிலங்கா அதிகாரிகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு அந்த 25 இலங்கையர்களையும் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.