அவுஸ்ரேலியாவிலிருந்து வெளியில் செல்லும்போதும் திரும்பிவரும்போதும் நிரப்பவேண்டிய பச்சை மற்றும் மஞ்சள் நிறப்படிவங்களை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?
குறிப்பாக விமானநிலையத்தில் வைத்து அந்த பச்சைப் படிவத்தை நிரப்புவதற்கு அவசர அவசரமாக பேனா தேடி, பெயர், கடவுச்சீட்டு இலக்கம், தொழில், பயணம் செய்யும் விமான இலக்கம் என பல விபரங்களை நிரப்பியது உங்களுக்கு நினைவிருக்கலாம். தனிநபர்களை விடவும் குடும்பமாகச் செல்பவர்களுக்கு இப்படிவங்களை நிரப்புவதற்கென்றே நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும்.
இனிமேல் அந்தச் சிரமம் இல்லை. எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் அவுஸ்ரேலியாவிலிருந்து வெளியில் செல்வோர் நிரப்பவேண்டிய பச்சை நிறப்படிவம் பாவனையிலிருந்து நீக்கப்படுவதாக குடிவரவுத்திணைக்களம் அறிவித்துள்ளது.
காகித அடிப்படையிலான படிவங்களை நீக்கிவிட்டு அதற்குப்பதிலாக தானியங்கி சேவை மூலம் தரவுகளைப் பதிவு செய்துகொள்வதானது, அவற்றைச் சேகரித்துவைத்துக்கொள்வதற்கும் இலகுவானதாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
அதேநேரம் ஆஸ்திரேலியாவுக்குள் வரும்போது நிரப்ப வேண்டிய மஞ்சள் படிவம் தொடர்ந்தும் பாவனையில் இருக்கும் என்றும், 2018ம் ஆண்டளவில் அதுவும் இல்லாமல் செய்யப்படலாம் எனவும் குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.