நாடாளுமன்றத்தில் அரசு முன்வைக்கும் குடியுரிமை – Citizenship தொடர்பான புதிய சட்ட முன்வடிவிற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என எதிர்கட்சியான லேபர் கட்சி அறிவித்துள்ளது.
புதிய குடிவரவுச் சட்டமுன்வடிவு தொடர்பில் கடந்த ஏப்ரலில் அரசு அறிவித்தபோது, அதிலுள்ள சில அம்சங்கள் நியாயமானவையாக இருப்பதால் அதற்கு ஆதரவு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுமென லேபர் கட்சி அறிவித்திருந்தது.
எனினும் இன்றையதினம் நடைபெற்ற லேபர் கட்சியின் உயர்மட்டக்கூட்டத்தின் முடிவில், இச்சட்டமுன்வடிவிற்கு ஆதரவு வழங்குவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதாக லேபர் கட்சியின் குடியுரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் Tony Bourke தெரிவித்தார்.
Permanent Residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் எனும் தற்போதைய நிபந்தனையை மாற்றி, ஒருவர் வதிவிட உரிமையுடன் 4 ஆண்டுகள் நாட்டில் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என்பதுடன், ஆங்கிலப்புலமையை நிரூபித்தல், பிற சமூகத்தோடு இணைந்து வாழப் பழகியிருத்தல், ஆஸ்திரேலிய விழுமியங்களை ஏற்றல் போன்ற பல புதிய நிபந்தனைகள் தற்போது அரசு முன்வைக்கும் குடியுரிமைச் சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ளன.
இவற்றில் ஆங்கிலப்புலமையை நிரூபிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள உயர் வரையறை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்பதுடன், வதிவிட உரிமை பெற்ற ஒருவர் குடியுரிமைபெறுவதற்கு 4 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதும் நியாயமற்ற அம்சம் என Tony Bourke சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த சட்டமுன்வடிவு நாடாளுமன்றில் அறிமுகப்படுத்தப்பட்டு செனற் அவையின் ஒப்புதலைப்பெறவேண்டிய பின்னணியில், இதனைச் சட்டமாக்குவதற்கு அரசுக்கு 10 எதிர்கட்சி செனட்டர்களின் ஆதரவு தேவைப்படும்.
கிரீன்ஸ்கட்சியும் அரசின் இந்த சட்டமுன்வடிவு நியாயமற்ற ஒன்று எனத் தெரிவித்துள்ளநிலையில், இதைச் சட்டமாக்குவதில் அரசுக்கு சிரமங்கள் எழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.