கற்றலில் உதவும் காணொளிகள்!

இணையத்தில் பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டுமல்ல, பாடங்களைக் கற்றுக்கொள்ள உதவும் கல்வி வீடியோக்களும் அநேகம் இருப்பது தெரிந்த விஷயம்தான். இத்தகைய கல்வி சார்ந்த வீடியோக்களைத் தேடித் தரும் இணையதளங்களும் இருக்கின்றன.

‘கிளாஸ்ஹுக்’ தளமும், கல்வி சார்ந்த வீடியோக்களைத் தேடித் தருகிறது என்றாலும், முற்றிலும் புதுமையான முறையில் இதை நிறைவேற்றுகிறது. இந்தத் தளம், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவும் திரைப்பட கிளிப்களை அடையாளம் காட்டுகிறது.

திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கணிதம், அறிவியல், உலக நடப்புகள் சார்ந்த உரையாடல்கள் இடம்பெறுவது உண்டல்லவா? இத்தகைய உரையாடல் கொண்ட வீடியோக்களை இந்தத் தளம் பட்டியலிடுகிறது (ஆனால், ஹாலிவுட் படங்கள் தான் இடம்பெற்றுள்ளன).

இந்தக் காட்சிகளைக் கொண்டு ஆசிரியர்கள் வகுப்பில் மாணவர்களுக்கு தொடர்புள்ள பாடத்தை நடத்தினால் அவர்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என இந்தத் தளம் கருதுகிறது. அறிவியல், கணிதம், மொழி என எந்தத் தலைப்பு சார்ந்த வீடியோக்கள் தேவை எனத் தேடிப் பார்க்கலாம்.

இணைய முகவரி: https://www.classhook.com/