அவுஸ்ரேலியாவில் குடியுரிமை தொடர்பில் கூடுதல் அதிகாரம்!

குடியுரிமை தொடர்பிலான புதிய சட்ட முன்வடிவில் குடிவரவு அமைச்சருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் அதிகாரம் குடிவரவு அமைச்சர் Peter Dutton-க்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி Tribunal எனப்படும் தீர்ப்பாயத்தின் முடிவுடன் உடன்படவில்லையாயின், அந்த முடிவினை மாற்றியமைக்கும் அதிகாரம் குடிவரவு அமைச்சருக்கு உண்டு.

குறித்த சட்டமுன்வடிவு நாடாளுமன்றில் அறிமுகப்படுத்தப்பட்டு செனற் அவையின் ஒப்புதலைப்பெறவேண்டிய பின்னணியில், இந்த அதிகாரம் அவசியமானது என குடிவரவு அமைச்சர் கூறியுள்ளார்.

Permanent residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர்.

எனும் தற்போதைய நிபந்தனையை மாற்றி, ஒருவர் வதிவிட உரிமையுடன் நான்கு ஆண்டுகள் நாட்டில் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என கூறப்படுகிறது.

மேலும் ஆங்கிலப்புலமையை நிரூபித்தல், பிற சமூகத்தோடு இணைந்து வாழப் பழகியிருத்தல், அவுஸ்திரேலிய விழுமியங்களை ஏற்றல் போன்ற பல புதிய நிபந்தனைகள் தற்போது அரசு முன்வைக்கும் குடியுரிமைச் சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.