மலைப்பாம்பு பாதுகாப்பாக கடந்து செல்ல வீதியில் படுத்த அவுஸ்ரேலிய வாலிபர்!

அவுஸ்ரேலியாவில் மலைப்பாம்பு ஒன்று பத்திரமாக சாலையை கடக்க வேண்டும் என்பதற்காக நபர் ஒருவர் சாலையின் குறுக்கே படுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியாவை சேர்ந்த மேத்யூ என்பவர் கடந்த புதன்கிழமை டம்பியர் போர்ட் எனும் பகுதியில் தன் நண்பருடன் சாலையில் பேசிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது சாலையின் நடுவே சுமார் 2.5 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது.

அது போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அந்த மலைப்பாம்பை ஏற்றிவிடும், இதனால் பாம்பு உயிரிழக்க நேரிடும் என்று எண்ணிய அவர், பாம்பு அங்கிருந்து நகர்ந்து செல்லும் வரை அதற்கு அரணாக சாலையில் படுத்துள்ளார்.

 சாலையில் அசையாமல் கிடந்த அந்த பாம்பின் வாலைத் தொட்டு உசுப்பியுள்ளார். இதையடுத்து மெதுவாக பாம்பு சாலையை கடந்து சென்றுள்ளது. அதுவரை, பாம்புக்கு அருகில் (பாதுகாப்பான தூரம்) சாலையில் படுத்திருந்த மேத்யூ, பாம்பு பத்திரமாக கடக்கும்வரை அதற்கு அரணாக இருந்துள்ளார். மலைப்பாம்பு சாலையை கடக்க ஏறத்தாழ 5 நிமிடங்கள் ஆகியுள்ளது.

இச்சம்பவத்தை அவரது நண்பர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இந்த வகை பாம்பு, மேற்கு அவுஸ்ரேலியாவின் பில்பாரா பகுதியில் அதிகம் காணப்படுவதாகவும், பாறை இடுக்குகள் மற்றும் குகைகளில் வசிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.