ஸ்னாப்டிராகன் 836 சிப்செட் கொண்ட முதல் சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 இந்த ஆகஸ்டு மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 836 சிப்செட் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 836 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்டின் அடுத்த பதிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. சிறு மேம்படுத்தல்களுடன் வெளியாகயிருக்கும் புதிய ஸ்னாப்டிராகன் 836 ஆக்டா கோர் பிராசஸர் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் கொண்டிருக்கும் என்றும் இதன் ஜிபியு 740 மெகாஹெர்ட்ஸ் வரை இருக்கும்.

மேலும் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியாகவுள்ள எல்ஜி வி30, கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்சல் ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 836 சிப்செட் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்துடன் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் முன்பக்க கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் என்றும் இது டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. கேலக்ஸி S8, மற்றும் S8+ போன்றே நோட் 8 ஸ்மார்ட்போனிலும் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா அமைப்பு, 3200 எம்ஏஎச் பேட்டரி, சாம்சங் பிக்ஸ்பி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.