அசுஸ் க்ரோம்புக் ப்ளிப் சி213 அறிமுகம்

தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ் சர்வதேச சந்தையில் புதிய க்ரோம்புக் பிளிப் சி213 எனும் லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படாத நிலையில் இதன் சிறப்பம்சங்கள்.

தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. க்ரோம்புக் ப்ளிப் சி213 என அழைக்கப்படும் புதிய சாதனத்தில் 360 ஹின்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் லேப்டாப் திரை இரண்டாக மடித்து வைத்தும் பயன்படுத்த முடியும்.

கூகுளின் க்ரோம் இயங்குதளம் கொண்டு இயங்கும் க்ரோம்புக்கில் கூகுள் செயலிகளான ஜி சூட், கூகுள் கிளாஸ்ரூம் மற்றும் கூகுள் கிளவுட் உள்ளிட்டவை ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. தவறுதலாக கீழே விழுந்தாலும் அதிக சேதாரம் ஏற்படாத வகையில் ரப்பர் பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அசுஸ் லேப்டாப் 1.2 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தாலும் பழுதாகாது என்றும் இதில் வழங்கப்பட்டுள்ள 360 டிகிரி மெட்டல் ஹின்ஜ் சுமார் 40,000 முறை லேப்டாப்பை திறந்து மூடலாம் என அறிவித்துள்ளது. இதேபோல் லேப்டாப் கீபோர்டில் நீர் சிந்தினால் எதுவும் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11.6 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்டுள்ள அசுஸ் க்ரோம்புக் ப்ளிப் சி213 இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மாடலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டுள்ளது, மற்றொரு மாடல் ஸ்டைலஸ் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 5 எம்பி பிரைமரி கேமரா மற்றும் வீடியோ கால்களுக்கு என எச்டி தரம் கொண்ட முன் பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. 46 வாட் திறன் கொண்ட பேட்டரி கொண்டுள்ள அசுஸ் க்ரோம்புக் ப்ளிப் சி213 சுமார் 12 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அசுஸ் நிறுவனத்தின் விவோபுக் மேக்ஸ் X541 லேப்டாப் ரூ.31,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏழாம் தலைமுரை இன்டெல் கோர் i3 பிராசஸர், 4 ஜிபி ரேம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டது. புதிய லேப்டாப்பில் கேமிங் கிரேடு கொண்ட கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது.