திரிஷாவுக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

நடிகை திரிஷாவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு திரையுல கில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர், கடந்த 2010-2011-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தார். அதில், ரூ.89 லட்சம் மட்டுமே கணக்கில் காட்டியிருந்தார். இதை வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கவில்லை.

பின்னர், அவர்கள் நடத்திய ஆய்வில், அடுத்த ஆண்டுகளில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள திரைப் படங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அவரது வருமானம் ரூ.3 கோடியே 50 லட்சம் என்று நிர்ணயம் செய்தனர். இதை ஏற்றுக் கொண்ட, நடிகை திரிஷா, ரூ.3.50 கோடிக்கான வருமான கணக்கை தாக்கல் செய்து, வரியையும் செலுத்தினார்.

ஆனால், உண்மை வருமானத்தை காட்டாமல், மறைத்து பொய்யான வருமான கணக்கை தாக்கல் செய்ததற்காக, நடிகை திரிஷாவுக்கு ரூ.1 கோடியே 11 லட்சம் அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நடிகை திரிஷா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ‘வருமான வரித்துறை சுட்டிக்காட்டிய வருமானத்தை திரிஷா பின்னர் காண்பித்துள்ளார். அதற்கு வரியும் செலுத்தியுள்ளார்.

எனவே, அவருக்கு அபராதம் விதித்தது தேவையற்றது என்று கூறி, அந்த அபராதத் தொகையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

அதில், ‘திரிஷா தன்னுடைய வருமானத்தின் உண்மை விவரங்களை முதலிலேயே தெரிவிக்கவில்லை. குறைவான வருமானத்தை காட்டி, பொய்யான கணக்கை தாக்கல் செய்துவிட்டார்.

அதன்பின்னர் வருமான வரித்துறை நடத்திய ஆய்வில், அவரது உண்மையான வருமானம் கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது, அந்த தொகைக்கு அவர் கணக்கு காட்டினாலும், அவர் முதலில் உண்மையை மறைத்ததால், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அபராதம் விதிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சட்டப்படியான அதிகாரம் உள்ளது.

எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.