அவுஸ்ரேலிய காவல் துறையால் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ணில், பெண்ணொருவரை பணயக்கைதியாக வைத்திருந்த ஆயுததாரியொருவரை,  நேற்று   (05) பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த நபர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர், ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக இடம்பெற்ற மோதலில், மூன்று அதிகாரிகளை, குறித்த நபர் சுட்டிருந்தார்.

இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட நபர், ஆயுததாரி நடவடிக்கையில் தொடர்புபட்டிருந்தாரா என்பது குறித்து அவுஸ்ரேலிய காவல் துறையினர்  ஆராய்ந்து வருகின்றனர்.

செல்வந்த கடற்கரையோர புறநகரான பிரைட்டனிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றிலேயே அதிகாரிகள் சுடப்பட்டதாகத் தெரிவித்தகாவல் துறை , துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்து இறந்தபடி வேறொரு நபரொருவர் மீட்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

அவசர சேவைகளுக்கு, பெண்ணொருவர் அழைத்து, தான் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, குறித்த கட்டடத்துக்குச் சென்ற விக்டோரியா மாநிலப் பொலிஸார், உள்ளிருக்கும் நபருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முனைந்ததாக, விக்டோரியா மாநில காவல் துறை  உதவி ஆணயாளர் அன்ரூ கிறிஸ்ப் தெரிவித்துள்ளார்.

பின்னர், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து, கட்டடத்துக்கு வெளியே வந்த நபர், காவல் துறையை  நோக்கிச் சுட்டு, மூன்று அதிகாரிகளைக் காயப்படுத்திய பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம், பயங்கரவாதக் காரணத்தால் இடம்பெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய கிறிஸ்ப், பயங்கரவாதத்துக்கெதிரான காவல் துறையினரும் , காவல் துறையினரின்  குற்றப் பிரிவும் விசாரணை மேற்கொண்டுவருவதாகக் கூறியுள்ளார்.