சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அவுஸ்ரேலிய அணி, வங்காளதேச அணியை 182 ரன்களுக்குள் சுருட்டியது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 5-வது ஆட்டம் லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குரூப் ஏ பிரிவில் உள்ள அவுஸ்ரேலியா, வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
துவக்க வீரர்களாக தமீம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர். தமீம் இக்பால் அவுஸ்ரேலிய பந்துவீச்சை சமாளித்து நேர்த்தியாகவும், அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் ஆடினார். ஆனால், மறுமுனையில் அவருடன் இணைந்த வீரர்கள் களத்தில் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சவுமியா சர்க்கார் (3), இம்ரல் கயிஸ் (6), முஷ்பிகுர் ரகிம் (9) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் அரை சதம் கடந்த தமீம் இக்பால் சதத்தை நோக்கி முன்னேறினார். அவருடன் 5-வது வீரராக களமிறங்கிய சாகிப் அல் அசன் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. தமீம் இக்பால் 95 ரன்களில் ஆட்டமிழந்து, சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். கடைசியில் ஸ்டார்க் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்ற, வங்காளதேச அணி 44.3 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆடம் சம்பா 2 விக்கெட்டுகளும், ஹசில்வுட், கம்டமின்ஸ், ஹெட், ஹென்றிக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் அவுஸ்ரேலியா களமிறங்கி விளையாடி வருகிறது.