ஊர்காவற்துறையில், கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் தொல்லியல் சின்னங்கள்!

தொல்லியல் திணைக்களத்திற்குச் சொந்தமான ஊர்காவற்துறை கடற்கோட்டையினை காரைநகர் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளதுடன், அதில் உல்லாச விடுதியினையும் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்திற்கு இருக்கின்ற நிலையில் மேற்படிச் சின்னங்களை சேதப்படுத்தல், அதன் வடிவங்களை மாற்றி அமைத்தல், அதனை உரிமை கோரல் என்பன தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

இந்நிலையில் தொல்லியல் திணைக்களத்திற்குச் சொந்தமான ஊர்காவற்துறைக் கடற்கோட்டையானது போர்த்துக்கேயரினால் 17ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பழமை வாய்ந்த கோட்டையாகும்.

இக்கடற்கோட்டையினை கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தியதுடன், தற்போது உல்லாச விடுதியினை நடத்துவதன் மூலம் அதிகளவிலான வருமானத்தையும் பெறுகின்றனர்.

இலங்கையில் பராமரிப்பின்றி இருக்கின்ற தொல்லியல் மற்றும் கலாசாரச் சின்னங்கள் தமது பட்டியலில் இருந்து நீக்கப்படுமென யுனெஸ்கோ அமைப்பு எச்சரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.